தமிழக செய்திகள்

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 1 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் கடந்த 7-ந்தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர்.

2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,26,959 சேர்க்கை இடங்கள் உள்ளன.

மாணாக்கர்கள் தாங்கள் விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதுவரை 22,4034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

மாணாக்கர்களின் நலன் கருதி விண்ணப்பப்பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக இரண்டு நாட்கள் இடைவெளியில் www.tngasa.in இணைய தளம் வாயிலாக ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பாக விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT