தமிழ்நாடு செய்திகள்

கொய்யாப்பழத்தில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்து வெடித்து 2 ஆடுகள் பலி

வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

Maalaimalar

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 54). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. திடீரென கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில் 2 ஆடுகளும் அங்கேயே இறந்துவிட்டன.

உடனே முருகன் ஓடி போய் ஆடுகளை பார்த்தபோது அந்த கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் ஆய்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.