தமிழக செய்திகள்

பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து- பெண் உள்பட 2 பேர் பலி

காயம் அடைந்த சூரிய பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள காட்டுகோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

வெடி விபத்து

இந்நிலையில் இங்கு நேற்று இரவு சிலர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு விபத்து ஏற்பட்டு கட்டிடம் முற்றிலுமாக தரைமட்டமானது. இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 30), விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சூர்யபிரகாஷ்(25) என்பவர் படுகாயம் அடைந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த சூரிய பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கோவில்பட்டி சப்-கலெக்டர் ஹீயூமன்சூமங்கள், டி.எஸ்.பி. ஜெகநாதன், தாசில்தார் அப்பனராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.