தமிழக செய்திகள்

TVK | விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வம்

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்து செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

மாலை மலர்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கிட்டத்தட்ட தேர்தல் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தற்போதைய சூழலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

கூட்டணி விஷயத்தை பொருத்தவரை தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாகி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தன்னை சந்தித்ததாக த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் அப்பதவியில் இருந்து நேற்று இடைநீக்கம் செய்து கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட டி.செல்வம் விஜய் முன்னிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.