ஆறே மாதத்தில் எல்லாம் நாசம் எனும் அளவுக்கு தவெக ஆட்சி உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய மு. ஸ்டாலின்,
ஒரு விஷயத்தில் கூட இந்த அரசால் உறுதியாக இருக்க முடியவில்லை. அறிவிக்கிறார்கள், ரத்து செய்கிறார்கள். எல்லாவற்றிலும் யு-டர்ன் தான்.
வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களே ஒரு செய்தியை கசிய விடுகிறார்கள், எதிர்ப்பு கிளம்பினால், உண்மை இல்லை என்று மறுக்கிறார்கள்.
தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்கும் கைடன்ஸ் அமைப்பே வழித்தெரியாமல் இருக்கிறது. இவர்களால், பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியனாக பார்க்கிறது.
மேகதாதுவில் அணையை கட்டியே தீருவேன் என கர்நாடகா முதலமைச்சர் பேசுகிறார்.
அவருக்கு பதில் சொல்வதற்கு பதிலாக நமது முதலமைச்சர் மாநில உரிமைகளை நிலைநாட்ட நீதியரசர் குரியன் தலைமையில் நாம் அமைத்த குழுவை அரசியல் காழ்ப்புணர்வுடன் கலைத்துவிட்டார்.
இதில் கொடுமை என்னவென்றால், ஆளுங்கட்சியும் பெரியாரை கொள்கை தலைவர் என்று கூறுவதுதான். இன்றைய ஆட்சிக்கு ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்.
மூட நம்பிக்கையில் மூழ்கிய இவர்கள், வெறுமனே கவர்ச்சிக்காக பெரியாரையும், அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் என சொல்லிக்கொண்டு, அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தவெக ஆட்சியில் பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தவெக நிர்வாகிகளே தொல்லை தருகிறார்கள்.
முதலில் இந்த ஆட்சியில் மின் வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேயும், பின் கஞ்சாவுக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் இடையேயும் போட்டி இருந்தது.
தற்போது அது அரசு உயர் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையேதான் போட்டி எனும் நிலையில் இருக்கிறது.
தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நம் ஆட்சியில் மக்களுக்கு பண வீக்கத்தின் பாதிப்பே தெரியாமல் இருந்தது.
ஆனால், இன்று அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது. இதற்கெல்லாம் முதலமைச்சர் எதாவது வாயை திறந்து பேசுகிறாரா என்றால் எதற்கும் வாய் திறப்பதில்லை.
எனக்கு இருக்கிற வருத்தம் எல்லாம், இத்தனை ஆண்டு காலம் நாம் பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி எல்லாம் ஆறே மாதத்தில் நாசம் எனும் சொல்லும் அளவுக்கு தவெக ஆட்சி இருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.