சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.
அவையில் முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையில்,
ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தான் புதிய தொழில்முதலீடுகள் வளரும், வேலைவாய்ப்பு உருவாகும், சுற்றுலாத்துறை வளரும். பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள். எனவே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமான அமைப்பாகும்.
சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எந்த அச்சமும் இடையூறும் இன்றி பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் உரிமை இல்லை என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்து இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு.
இந்த அவையில் பலரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அரசை குறைகூறும் நோக்கில் கருத்துக்களை கூறியவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையையும் பொறுப்புணர்வையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஏற்பதில் பாகுபாடு காட்டமாட்டோம்.
சட்டம் ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று அன்றே திருவள்ளுவர், எந்த சார்பும் அற்று யாருக்கும் சார்பு அற்று நடுநிலையுடன் நீதி வழங்குவதே உண்மையான ஆட்சி என கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியையும் காமராஜர் நேராமையான் நிர்வாகத்தையும், பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஏழை எளியோரின் நலனை தனது அரசின் மையமாக கொண்டிருந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது. அது மக்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
குற்றத்தை பார்க்கும் பார்வையும் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட நிலைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுக்கிவிட முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.
ஒவ்வொரு குற்றத்தின் பின்னால் முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைப்பொருள் கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம், அதிகாரம் மீதான போட்டி, கலப்புத்திருமண எதிர்ப்பு, உள்ளூர் அரசியல் உள்ளிட்ட பல சமூக காரணிகள் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம்.
எனவே 30.7.2026 அன்று நடந்த காவல்துறை மாநாட்டில் காவல்துறை பணி குற்றவாளியை கைது செய்வதோடு முடிந்துவிடக்கூடாது. குற்ற சூழலை மாற்றி குற்றம் நடைபெறுவதை தடுப்பதே இலக்கு என வலியுறுத்தினேன்.
இதற்கு ஒவ்வொரு காவல்நிலையமும் அங்கிருக்கும் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சனை குறித்து காவல்துறை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டமொழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களோடு மட்டும் முடியவில்லை. சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன.
இணைய மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணம் அல்ல. டிஜிட்டல் அறிவு குறைவு, விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது இதற்கு வழிவகுக்கின்றன. எனவே சைபர் குற்றங்களை வளர்க்க, காவல்துறை தொழில்நுட்ப திறனை அதிகரிப்பது மட்டும் போதாது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குற்றத்திற்கு இரையாகாமல் தடுப்பது தான் வெற்றி." என்றார்.