தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
"அறிவிக்கப்பட்டுள்ள 164 வேட்பாளர்களில் 16 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். பட்டம் படித்தவர்கள் 125 பேர் ஆவார்கள். இதில் 15 பேர் டாக்டர்கள் ஆவார்கள். 7 பேர் முனைவர் ஆவார்கள்.
அதிமுக முன்னரே அறிவித்து விட்டார்களே திமுக இன்னும் அறிவிக்கவில்லையே என அனைவரும் கேட்டார்கள்.
நாங்கள் லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறோம். திமுக மகா மகா கூட்டணியை அமைத்திருக்கிறது. கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் பொறுமையாக பேசி அனைவரையும் திருப்திப்படுத்தி ஒற்றுமையாக கையழுத்திட்டிருக்கிறோம்.
எல்லாரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக நேரமானதே தவிர காலம் தாழ்த்தப்படவில்லை.
பாராளுமன்ற தேர்தல் முடிந்த உடனேயே சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கி விட்டோம்.
175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்திலும், 59 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.
திமுக தேர்தல் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும். வரும் 31ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன்" என்று கூறினார்.