தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த மறைமலை நகரில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்தில் கர்நாடகத் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“தமிழ்நாட்டின் தலைமகன் - நம்மையெல்லாம் ஆளாக்கிய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிற்கு, வாக்கு கேட்டு, மறைமலைநகருக்கு நான் வந்திருக்கிறேன்.
காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில், எந்தப் பக்கம் திரும்பினாலும் தொழிற்சாலைகள், எங்கு பார்த்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள். இந்தத் தொழிற்சாலைகளை எல்லாம் கொண்டு வந்தது யார்? தி.மு.க.
தொழிற்சாலைகள் மட்டுமா… வளமான வயல்கள்; நிறைவான நீராதாரம் என இருக்கும் ஒருங்கிணைந்த காஞ்சிக்கு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
தி.மு.க. என்றால், வளர்ச்சி! தி.மு.க.வின் வளர்ச்சித் திட்டங்களைத் தெரிந்து கொள்ள தலைநகர் சென்னையையும், சுற்றியிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளையும் சுற்றி வந்தாலே நன்றாத் தெரிந்துவிடும்.
2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல், திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு, மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம். இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார்.
மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம்.
பழனிசாமி அவர்களே... இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை. யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள்.
ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன்... இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது, அதுதான் உண்மை… இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!” எனப் பேசினார்.