தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜயின் த.வெ.க.-வுக்கு 108 இடங்கள் கிடைத்தன. இதனால் விஜய் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் ஆதரவு கேட்டார். அந்தவேளையில் விசிக கடிதம் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அதிமுக மற்றும் திமுக ஆகியவை சேர்ந்து முதலமைச்சராக்க முயன்று வந்ததால், காலதாமதம் ஆனதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
இடது சாரிகள் மற்றும் வி.சி.க. ஆதரவு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு, நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தோம். ஆதரவு கடிதம் கொடுத்த பிறகும், முதலமைச்சர் பதவி தர இருப்பதாகவும், அதிமுக தரப்பில் துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக் கொண்டதாகவும் எனக்கு ஒரு தகவல் வந்தது.
நீங்கள் சம்மதித்தால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக திமுக சொன்னதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. அதை நான் Fun ஆக எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர்கள் சீரியசாக ஒரு மூவ் நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். நாங்கள் நாளை பத்திரிகையாளர்கனை சந்தித்து அறிவிக்கப் போகிறோம் என்று வந்துவிட்டோம்.
இவ்வாறு திருமாளவன் தெரிவித்தார்.
மேலும், எங்களுடைய பிரசாரம் பாஜக-வுக்கு வாக்களிக்கக் கூடாது என்பது. திமுக-வுக்கு எதிர்ப்பான வாக்குகள் சீமான் கட்சி, அதிமுக, பாஜக-வுக்கு சென்றன. எங்களுடைய பிரசாரம் த.வெ.க.-வுக்கு எளிதாகிவிட்டது. பாஜக-வுக்கு எதிராக எங்களுக்கு வாக்களித்த வாக்குகள் த.வெ.க.வுக்கு போய்விட்டது. உதாரணத்திற்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்குகள்.
சினிமாவில் விஜய் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், அரசியலில் ஜோசப் விஜய் பிராண்ட் படுத்தப்பட்டதால் பெரும்பாலான கிறிஸ்தவ வாக்குகள் இந்த பக்கம் சென்றுவிட்டது. சுமார் 80 சதவீதம் கிறிஸ்தவ வாக்குள் அந்த பக்கம் சென்றுவிட்டது. முஸ்லிம் வாக்குகளில் 60 முதல் 70 சதவீதம் வாக்குகள்தான் திமுக-வுக்கு வந்துள்ளது. அங்கும் சேதாரம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக, திமுக, நாதக, பாஜக-வின் முக்கியமான (Core) வாக்குகளும் த.வெ.க.வுக்கு சென்று விட்டன. எங்கள் வெற்றிக்கு முக்கியமாக இருந்தது சிறுபான்மையினர் வாக்குகள். அந்த வாக்குகள் பெருமளவில் மாற்றமாகியுள்ளது. இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.