தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.
தமிழக சட்டசபையில் இன்று 3 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதரத்தை முன்னேற்ற சாலைகள் தேவை, தி.மு.க. ஆட்சியில் 67,000 கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டது. டெண்டர் விலை உயர்த்தி முறைகேடு செய்ய தெரியாது என முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார்.
உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்,
முதலமைச்சரை யாரும் வழிநடத்த தேவையில்லை, விரல் நுனியில் தகவல் வைத்துள்ளார் முதலமைச்சர் என்றார்.
இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.
இதனை தொடந்து பேசிய எ.வ.வேலு, நடப்பு ஆண்டில் எவ்வளவு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என விவரம் இல்லை. ஒரு திட்டம் போட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என கொள்கை குறிப்பில் சொல்ல வேண்டும். வெள்ள தடுப்பு பணிகள் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இல்லை.
நேற்று எங்களுக்கு சலாம் போட்டவர் தான் இன்று உங்களுக்கு சலாம் போடுகின்றனர், அரசு அலுவலர்கள் பொதுவானவர்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் அப்போதைய அரசு ரத்து செய்தது, பல போராட்டங்கள் நடைபெற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை திமுக அரசின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டது. அரசு ஊழியர்களுக்காக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார்.