ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.
சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இதேபோல் சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் ஒற்றை யானை கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் காய்கறிகளோடு ஏற்றி வரும் லாரிகளை வாசனை பிடித்து வழிமறித்து கரும்பு காய்கறிகளை பறித்து சாப்பிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதி விட்டு வெளியேறி உலா வந்து கொண்டிருக்கிறது. கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை தின்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பகுதியில் கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை அந்த ஒற்றை யானை மடக்கியது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
யானை வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்தினார். பின்னர் அந்த ஒற்றை யானை தும்பிக்கையால் லாரியின் மேற்பகுதியில் இருந்த கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்து சென்றது இதன் பிறகு அந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து சீரானது. வனத்துறையினர் தாளவாடி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.