தமிழக செய்திகள்

ஈரோட்டில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

மது அருந்தும் பழக்கமுடைய இவர், அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரோட்டில் தந்தையை குடிபோதையில் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு புதுமை காலனி, சென்டர் தியேட்டர் அருகே வசித்து வந்தவர் அப்துல் ரஹீம் (75). பூ வியாபாரம் செய்து வந்த இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தந்தையிடம் தகராறு

இந்நிலையில், மூன்றாவது மகனான சபிக் (37), இரு சக்கர வாகனப் பட்டறையில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தனது தந்தையின் வீட்டில் தங்கி வந்துள்ளார். மேலும், மது அருந்தும் பழக்கமுடைய இவர், அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவும் சபிக் வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது தந்தை அப்துல் ரஹீம் தினமும் குடித்து விட்டு வருகிறாயே என மகனிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சபிக் தந்தை அப்துல் ரஹீமிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், தந்தையின் தலையை பிடித்து தரையில் பலமாக மோதியதுடன் சுவற்றிலும் மோதி கடுமையாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில்

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது குடிபோதையில் மகன் தாக்கியதில் அப்துல் ரஹீம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் ரஹீமை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சபிக்கை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை குடிபோதையில் மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT