தமிழக செய்திகள்

சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு

தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான்.

சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு

சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.

அவர் கூறியதாவது:-

என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.

எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.

பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்புகள்

சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு. சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.

ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும்.

"மேலவளவு" கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம்

மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.