எடப்பாடி பழனிசாமி
தமிழக செய்திகள்

ஆயுதபூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் ஆயுதபூஜை, விஜயதசமி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவி யையும் மக்கள் பக்தியோடு வணங்கி வழிபடுவார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.

அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்

விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜய தசமி பண்டிகையாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜய தசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்ற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், டிடிவி தினகரன்

இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், ஜி.எஸ்.டி.யு.சி. தலைவர் மு.பன்னீர் செல்வம், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு பண்பாட்டை தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம. நாராயணன் ஆகியோரும் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT