rajinikanth - edappadi palaniswami 
தமிழ்நாடு செய்திகள்

ரஜினியை விமர்சித்து பேசிய ஆதவ் அர்ஜுனாவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் | Rajinikanth

மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இந்நிலையில் அவரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. ரஜினிகாந்த அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.

அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.

அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்" என்று தெரிவித்துள்ளார்.