எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைதுசெய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது.
அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.