தமிழக செய்திகள்

கல்லாப்பெட்டி கூட்டணி என தேர்தலுக்குமுன் சொன்ன கட்சிகளை எல்லாம் ‘Sofa கூட்டணி' க்குள் நுழைக்க முயற்சி - இபிஎஸ்!

முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா முதலமைச்சரே? எதற்கு இந்த இரட்டை வேடம்?

கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்? என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

“கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு அளிக்கும் வகையில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு ஆணையை ஓராண்டிற்கு நீட்டித்து தவெக பொய்க்கால் குதிரை அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இதே திட்டத்தை, கடந்த 03.11.2024 அன்று நடந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அந்த தீர்மானத்தில் இத்திட்டத்தை தென் தமிழகத்தை பாழ்படுத்தும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ள இன்றைய ஆளுங்கட்சி, இதனை அபாயம் விளைவிக்கும் நாசகார நச்சுத் திட்டம் என்று கூறி இதனை கைவிட வலியுறுத்தி உள்ளது.

தற்போது அந்த நிலைப்பாட்டில் என்ன மாற்றம் வந்துவிட்டது? ஆட்சிக்கு வருவதற்கு முன் நாசகார நச்சுத் திட்டமாக இருந்தது, இப்போது நன்மை பயக்கும் நலத்திட்டம் ஆகிவிட்டதா முதலமைச்சரே? எதற்கு இந்த இரட்டை வேடம்?

மேலூர் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனையை சட்டமன்றத்தில் எழுப்பி, பல ஆதாரப்பூர்வமான கேள்விகளை அரசை நோக்கி கேட்டு மக்களுக்காக நின்றவன் நான்.

“மக்கள் பிரச்சனைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம்” என்று சட்டப்பேரவையிலேயே முழங்கினேன் நான். இந்த வரலாறெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்த கட்சி எம்.எல்.ஏ-க்களை வலைவீசி, குதிரை பேரம் பேசி இழுப்பதற்கும், “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தேர்தலுக்கு முன் சொன்ன கட்சிகளை எல்லாம், தங்கள் “சோஃபா கூட்டணி”க்குள் நுழைப்பதற்கும் இடையே இப்படி ஒரு அரசாணை வெளியிட்டால் அதனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தீர்களா?

மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, மக்களுடன் நிற்பது மட்டும் தான் அதிமுகவின் ஒரே பணி! அது ஒருநாளும் மாறாது!

நச்சுத் திட்டம் என்று இன்றைய ஆளுங்கட்சி சொன்ன திட்டத்தை இப்போது செயல்படுத்த முனைவது குறித்த காரணத்தை இன்றைய முதலமைச்சர் விளக்க வேண்டும்; உள்ளபடியே அது நச்சுத் திட்டம் தான் என்றால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.