விழாவில் மணமகள், மணமகன் குடும்பத்தினர், இரு நாட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை டவுன் பஞ்சாயத்து 11 வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி. இவரது மனைவி காஞ்சனா இந்த தம்பதியினரின் மகன் பரத்குமார் டெல்லி ஐ.ஐ.டி,யில் பொறியியல் படித்தவர். பரத்குமார் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ‘குளோப்-இங் இன்ங்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
டோக்கியோவில் பணியாற்றிய போது, அதே நகரைச் சேர்ந்த ஹிடெடோஷி இஷிசுகா, கெய்கோ இஷிசுகா தம்பதியினரின் மகள் ஹரூமி இஷிசுகா என்பவருடன் பரத்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இருவரது நட்பும் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், தங்கள் விருப்பத்தை இரு வீட்டாரிடமும் தெரிவித்தனர். கடல் கடந்த இவர்களது காதலுக்கு இரு நாட்டுப் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டவே, இந்து கலாச்சார முறைப்படி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது.
நேற்று இவர்கள் திருமணம் சென்னிமலை அடுத்துள்ள மேற்கு புதுப்பாளையத்தில் உள்ள ‘செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில்’ வெகு விமரிசையாக நடந்தது. திருமண விழாவில் தமிழ் பாரம்பரியச் சடங்குகள் அனைத்தும் முறைப்படி அரங்கேறின. அதிகாலையிலேயே மங்கள இசை முழங்க, கணபதி ஹோமம் மற்றும் புனித கலசங்கள் நிறுவப்பட்டு சடங்குகள் தொடங்கின. மணமகன் பரத்குமார் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டையிலும், ஜப்பான் மணமகள் ஹரூமி இஷிசுகா அழகிய சிவப்பு நிறப் பட்டுப் புடவை, நெற்றிச்சுட்டி, வளையல்கள் மற்றும் தாமரை மலர் மாலைகளுடன் அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாக ஜொலித்ததும் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, அக்னி சாட்சியாக சடங்குகள் நடைபெற்றன. கெட்டிமேளம் முழங்க, உறவினர்கள் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, சுபமுகூர்த்த வேளையில் மணமகள் ஹரூமி இஷிசுகாவின் கழுத்தில் மணமகன் பரத்குமார் தாலி கட்டினார்.
தொடர்ந்து, குடும்பத்துப் பெரியவர்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் மணமகளுக்குப் பூவும் பொட்டும் வைத்து வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, அக்னியை வலம் வந்து சப்தபதி எனப்படும் ஏழு அடிகள் எடுத்து வைக்கும் சடங்கு, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட தமிழ் திருமணத்தின் அத்தனை சம்பிரதாயங்களையும் ஜப்பான் மணமகள் மிகுந்த ஆர்வத்துடனும் பக்தியுடனும் செய்தது அனைவரையும் கவர்ந்தது. விழாவில் மணமகள், மணமகன் குடும்பத்தினர், இரு நாட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். கலாச்சாரங்களை இணைத்த இந்த திருமணம் சென்னிமலைப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.