தமிழக செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி மீது குற்றப்பத்திரிகை ரத்து: என்ஜினீயர் கவினின் பெற்றோர் 2-வது நாளாக போராட்டம்

கவினின் தந்தை சந்திரசேகர், தாய் தமிழ்ச்செல்வி ஆகியோர் இன்று 2-வது நாளாக கவினின் புகைப்படத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுடைய மகன் கவின். என்ஜினீயரான இவர் மாற்று சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவருடைய பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி, உறவினரான ஜெயபால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்-கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

பெற்றோர் தர்ணா போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவினின் பெற்றோர் ஆறுமுக மங்கலத்தில் தங்களது வீட்டின் முன்பாக நேற்று தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

இவ்வளவு நாட்களாக நாங்கள் போராடியது எதற்காக? போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியானால், எங்களுக்கான நீதி எங்கே?. எங்கள் பிள்ளையை ஒரு பெண்ணை விரும்பியதற்காக இப்படி கொலை செய்ய வேண்டுமா? இது நியாயமா? ஒரு தாயாக என் மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். இனி இதுபோன்ற சம்பவத்தில் மற்றொரு கவின் பலியாகக் கூடாது. விசாரணை முழுமையாக நடைபெறாமல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு விளக்கம் வேண்டும்.

போலீஸ்

வழக்கில் தொடர்புடையவர்கள் போலீஸ் அதிகாரிகளாக இருப்பதால், அவர்களின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. நாங்கள் நீதி, நேர்மை என்றுதான் நம்புகிறோம். நீதியின் அடிப்படையில்தான் இதுவரை போராடி வருகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், எங்களுக்குள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய விளக்கம் கிடைக்க வேண்டும்.

அரசு

தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து, வழக்கில் தேவையான மேலதிக விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை வெளி வந்து என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகர், தாய் தமிழ்ச்செல்வி ஆகியோர் இன்று 2-வது நாளாக கவினின் புகைப்படத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT