தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதனடிப்படையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தங்கம், வெள்ளி, மற்றும் பணம் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
சந்தேகத்திற்கிடமான பெரிய அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போதுவரை தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி ஆகும்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கம் - ரூ.2.37 கோடி
மதுபானம் - ரூ.0.18 கோடி
போதைப்பொருட்கள் - ரூ.2.88 கோடி
விலைமதிப்பற்ற உலோகங்கள் - ரூ.16.42 கோடி
இலவசங்கள்/ பிற பொருட்கள் - ரூ.20.80 கோடி
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.