தமிழக செய்திகள்

சென்னை ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பு அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த ஊழியர் கைது

மாநகராட்சி சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையையும் புகைப்படம் எடுத்து உள்ளார். பின்னர், இந்த 2 காட்சிகளையும் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த 23-ந்தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ராணிமேரிக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் 16 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இரவு-பகலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியில் இருந்து வருகிறார்கள். கண்காணிப்பு கேமராக்களை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சென்னை ஒப்பந்த பணியாளரான யுவராஜ் என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக் கழக வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்களை கண்காணிக்கும் அறையில் பணியில் இருந்த போது யுவராஜ் தனது லேப்டாப்பில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். திரைப்படத்தை பார்த்தபோது அதனை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அத்துடன் மாநகராட்சி சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையையும் புகைப்படம் எடுத்து உள்ளார். பின்னர், இந்த 2 காட்சிகளையும் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்து அவரது முகநூல் நண்பர்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.

இதுபற்றிய தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. அதைகேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியான சைலேந்திரா என்பவர் கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார்.

கோட்டூர்புரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் ஜனநாயகன் படத்தை பதிவு செய்து பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தி வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக கவனித்து அதனை கண்காணிக்கும் பணியில் யுவராஜ் தலைமை தாங்கி இருந்துள்ளார்.

இதுபோன்ற சூழலில் தான் அவர் தனது பணியில் கவனக்குறைவாக இருந்து ஜனநாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக கண்டு ரசித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மையத்தில் சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் தீவிரமாக கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.