தமிழ்நாடு செய்திகள்

சாலையில் உலா வரும் யானைகள்- வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.மலைஅடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Maalaimalar

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்தநிலையில் பருவமழை காரணமாக மலையடி வார பகுதிகளில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தேடி மலையடிவாரப்பகுதிக்கு வந்துள்ள யானைகள், கொசுத்தொல்லை காரணமாக வனப்பகுதிக்குள் திரும்பி செல்லாமல் அடிவார பகுதியிலேயே முகாமிட்டு வருகிறது.

காலை நேரத்தில் உடுமலை- மூணாறு சாலையை கடந்து செல்வதும் மாலையில் அமராவதி அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் உடுமலை-மூணாறு சாலை மலைஅடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.