தமிழக செய்திகள்

காரின் கண்ணாடியை தந்தத்தால் உடைத்து ஆக்ரோஷமாக துரத்திய ‘படையப்பா’ யானை

உடுமலை - மூணாறு சாலையில் உள்ள பெரியவாரை பகுதியில் 'படையப்பா' காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் ஒய்யாரமாக உலா வந்து கொண்டிருந்தது.

யானை சாலையை கடந்து செல்லும் வரை காத்திருப்பதற்காக, தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு பீதியுடன் உள்ளே அமர்ந்திருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக, இப்பகுதியில் சுற்றித்திரியும் 'படையப்பா' என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை அடிக்கடி சாலையில் வந்து வாகனங்களை வழிமறிப்பது வழக்கம்.

இந்த நிலையில், மாலை உடுமலை - மூணாறு சாலையில் உள்ள பெரியவாரை பகுதியில் 'படையப்பா' காட்டு யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் ஒய்யாரமாக உலா வந்து கொண்டிருந்தது.

வாகன ஓட்டிகள்

இதனைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சமடைந்தனர். யானை சாலையை கடந்து செல்லும் வரை காத்திருப்பதற்காக, தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு பீதியுடன் உள்ளே அமர்ந்திருந்தனர்.

அப்போது, வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நோக்கி 'படையப்பா' யானை கம்பீரமாக நடந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. திடீரென ஆக்ரோஷமடைந்த அந்த யானை, அங்கிருந்த கார் ஒன்றின் அருகே சென்று, தனது கூர்மையான பெரிய தந்தங்களால் காரின் முன்புறக் கண்ணாடியை ஓங்கி தாக்கியது. இதில் காரின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

யானை

கண்ணிமைக்கும் நேரத்தில் யானை தாக்கியதை கண்டு காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சுதாரித்துக்கொண்ட கார் டிரைவர், உயிர் தப்பினால் போதும் என காரை வேகமாக முன்னோக்கி இயக்கி அங்கிருந்து நகர்த்தினார். ஆனாலும் ஆத்திரம் தீராத படையப்பா யானை, பிளிறியபடியே அந்த காரை சாலையில் ஆக்ரோஷமாக துரத்திச் சென்றது.

இதனைப் பார்த்த சக வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் பீதியில் அலறியடித்தனர். சிறிது தூரம் காரை துரத்திச் சென்ற யானை, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த திகில் சம்பவத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் உடுமலை - மூணாறு சாலையில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சாலையில் நின்ற காரை 'படையப்பா' யானை தாக்கி, துரத்தும் திக்... திக்... வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT