காரபள்ளம் சோதனை சாவடிக்கு சமீபகாலமாக முற்றுகையிட்டு கரும்புகளை தின்று ருசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் இருந்த கரும்புக்கட்டுகளை தூக்கிக்கொண்டு காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக ஓடியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் குடிநீர் உணவு தேடி யானை கூட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுவது, தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழிமறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அதுவும் சமீபத்தில் பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை, திம்பம் ஆசனூர் கடம்பூர் போன்ற பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதைப்போல் தமிழகம் கர்நாடகா எல்லைப் பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடியிலும் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
காரப்பள்ளம் சோதனை சாவடி தமிழகம் கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து கரும்புகள் அதிகளவில் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்பாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு ஏற்றி வரும் லாரிகள் காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக வருகிறது. லாரிகளில் அளவுக்கு மீறி கரும்பு கட்டுகள் ஏற்றுவதை தடுக்கும் வகையில் காரபள்ளம் சோதனை சாவடி அருகே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
கரும்பு லோடுகளை ஏற்றி வரும் லாரிகள் அதிக அளவில் கரும்புகளை ஏற்றி வரும் போது இரும்பு தடுப்புகள் தாண்டி செல்ல இயலாது எனவே லாரி டிரைவர்கள் சில கரும்புக்கட்டுகளை சாலையோரம் வீசிவிட்டு சென்று விடுகின்றனர்.
இந்த வாசனையை மோப்பம் பிடித்து யானை கூட்டங்கள் காரபள்ளம் சோதனை சாவடிக்கு சமீபகாலமாக முற்றுகையிட்டு கரும்புகளை தின்று ருசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் இருந்த கரும்புக்கட்டுகளை தூக்கிக்கொண்டு காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக ஓடியது.
இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. எனவே காரப்பள்ளம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.