ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பான விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட கம்பி கொல்லை பகுதியில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிவக்குமார் என்பவர் சிறப்பு நிலை ஆக்க முகவராக பணியாற்றி வருகிறார்.
இவர், ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 2-வது தார்வழி பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் ஜி.பே. மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கியதாகவும், இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜன் தலைமையிலான அதிகாரிகள், கம்பிகொல்லை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, சிவக்குமாரிடம் சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பான விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
கைதான சிவக்குமாரின் மனைவி நிர்மலா, மல்லகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.