2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. மதியம் 4:00 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இத்தேர்தலில் கிட்டத்தட்ட தவெக வெற்றி உறுதியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
தமிழ்நாடு மக்களின் தீர்ப்புக்கு நான் தலைவணங்குகிறேன். என் மண்ணில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே குரலில் எழுந்து நின்று, பின்வரும் கருத்துகளைத் தெளிவுபடுத்தியதைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்:
வாக்குகள் விற்பதற்கு இல்லை, வாரிசு அரசியலுக்கு இடமில்லை மற்றும் அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு 'ஆம்' என்று வாக்களித்துள்ளனர். இதைச் சாத்தியப்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் உண்மையில் அனைவருக்கும் ஒரு பெரும் நன்மையையே செய்துள்ளார்.
தமிழக அரசியலில் மிகச் சிறப்பானதொரு அறிமுகத்தைப் பெற்றதற்காக, தவெக மற்றும் நடிகர் விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ள நற்பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பாராக.
மேலும், என்.டி.ஏ. கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்; களத்தில் இது ஒரு மிகக் கடுமையான போராட்டமாக அமைந்திருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்; இம்முறை வெற்றியைப் பதிவு செய்ய இயலாதவர்கள் எவரும் மனம் தளர வேண்டாம், நாம் தொடர்ந்து போராடுவோம்.
இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், சீமான் அவர்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாகவும், மிக முக்கியமாகவும் களத்தில் கடுமையாக உழைத்த எனது அன்பிற்குரிய தமிழ்நாடு பாஜக தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். சிறந்த காலம் விரைவில் வரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.