தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனை  
தமிழக செய்திகள்

தேர்தல் நடைமுறை எதிரொலி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு- வியாபாரிகள் கவலை

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா சீசன் துவங்கும்.

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும்.

மலைகள், குளிர்ந்த காலநிலை, பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்கள், ஏரிகள், அருவிகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பார்க்க ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

பொதுவாக மார்ச் மாதம் தொடங்கியவுடன் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து விடும். அதனால் வெயிலிலிருந்து தற்காலிக நிவாரணம் பெற பலர் மலைப்பகுதிகளை நாடுகின்றனர்.

இதனால் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா சீசன் துவங்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில் இந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என சுற்றுலா துறை மற்றும் வணிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் காவல்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு சாலைகளில் வாகனங்கள் நீண்ட நேரம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் போக்குவரத்து தாமதம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை காரணமாக சில சுற்றுலா பயணிகள் பயணம் செய்வதில் தயக்கம் காட்டக்கூடும். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறையும்.

அப்படி சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தால் ஓட்டல்கள், விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரின் வருமானமும் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், தேர்தல் பணிகள் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து இருப்பது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கும் உதவியாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தேர்தல் காலம் முடியும் வரை சுற்றுலா பயணிகள் வருகையில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வருபவர்கள் கூறுகின்றனர்.