தமிழக செய்திகள்

பூத் சிலிப் வினியோகத்தை 2 நாட்களில் முடிக்க ஏற்பாடு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தகவல் சீட்டுகள் விநியோகத்தின்போது வாக்குச்சாவடி முகவர்கள் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் பி.எல்.ஓ.க்களுடன் உடன் செல்லலாம்.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஏப்ரல் 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் (முதற்கட்டம்) ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகளை (பூத் சிலிப்) வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்தத் தகவல் சீட்டில் வாக்காளரின் விவரங்கள், வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம், வாக்குச்சாவடி வரைபடத்தின் நகல் ஆகியவற்றுடன் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை’ பட்டியலும் இடம்பெற்றுள்ளது.

கியூ.ஆர். குறியீடு வாக்காளர் விவரங்களை விரைவாகத் தேட உதவுகிறது. மேலும், இது வாக்குச்சாவடிகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், விரைவான வாக்குப்பதிவுக்கும் உதவுகிறது.

வாக்காளர்களின் வசதிக்காக இந்தத் தகவல் சீட்டுகளை அதிக வாசிப்புத் தன்மை மற்றும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தனது புதிய முயற்சிகளில் ஒன்றாக முன்னதாகவே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. அதன்படி, எளிதாக அடையாளம் காண்பதற்காகவும் பயன்படுத்துவதற்காகவும், வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவை இந்தச் சீட்டில் தெளிவாகத் தெரியும்படி அச்சிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று இந்தச் சீட்டுகளை விநியோகிப்பார்கள். இந்தச் செயல்முறை வாக்குப்பதிவு நாளுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்துப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கும் முடித்திட வேண்டும்.

இந்தத் தகவல் சீட்டுகள் எளிதில் அணுகக்கூடியதாகவும், வாக்காளர்களுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்ய, அந்தந்தத் தொகுதிக்கு எந்த மொழியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறதோ, அதே மொழிகளில் மட்டுமே இந்தச் சீட்டுகளும் இருக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மற்றும் ஆக்கபூர்வமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக, பார்வைக் குறைபாடுள்ள அல்லது பார்வையற்றவர்களுக்கு, வழக்கமான தகவல் சீட்டுடன் கூடுதலாக பிரெய்லி வசதியுடன் கூடிய அணுகக்கூடிய வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தகவல் சீட்டுகள் விநியோகத்தின்போது வாக்குச்சாவடி முகவர்கள் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் பி.எல்.ஓ.க்களுடன் உடன் செல்லலாம்.

இந்தத் தகவல் சீட்டுகளை அங்கீகரிக்கப்படாத வகையில் விநியோகிப்பது அல்லது வைத்திருப்பது விதிமீறலாகக் கருதப்படும். இதற்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வாக்குப்பதிவின்போது ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்துவதற்கு, வாக்காளர் தகவல் சீட்டை தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த வாக்காளர் அடையாள அட்டை தவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பூத் சிலிப்புகளை வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வினியோகம் செய்து முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் இன்னும் 2 நாட்களில் பூத் சிலிப் வினியோகம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.