தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதேபோல, ஆதவ் அர்ஜூனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது.
கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன் என்றார். தொடர்ந்து 2 வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கினார்.
அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.