சென்னை மாவட்டத்தில் பொதுவாக வாக்குப்பதிவு குறைவாகவே இதுவரையில் இருந்து உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து 40 லட்சம் வாக்காளர்கள் இருந்த சென்னை நகரில் தற்போது 28 லட்சமாக குறைந்துள்ளது.
12 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. 2 இடங்களில் ஓட்டு உரிமை வைத்திருந்தவர்கள், இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவை கொண்டு வர வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு தற்போது விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. வாக்குரிமை ஜனநாயக கடமையாகும், தேச நலனை பாதுகாக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தேர்தல் நடைபெறும் 23-ந்தேதி அன்று ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளுடன் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.
அண்ணா நகர் டவர் பூங்கா, வடபழனி மால், மெரினா கடற்கரையில் 2 இடங்கள், மாநகர பஸ்கள், சேப்பாக்கம் ஸ்டேடியம், மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள், விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.