தமிழக செய்திகள்

தள்ளுவண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்... தேனியில் அவலம்

உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடலை மயானத்துக்கு கொண்டு வந்த காட்சிகளை பொதுமக்கள் பலரும் வேதனையுடன் பார்த்தனர்.

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சீதாலட்சுமி (வயது 64). இவர் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் ஆதரவற்ற நிலையில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் அதே ஊரில் தனக்கு தெரிந்த சிலரை பார்க்க சென்றார். அப்போது திடீரென அவர் தெருவில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

தேனி மின் மயானம்

ஆம்புலன்சு பணியாளர்கள் அங்கு வந்து பரிசோதித்து பார்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. அவருடைய உடலை தகனம் செய்ய சிலர் முயற்சி செய்தனர். இதற்காக அவர்கள், தேனி மின் மயானத்தில் தகனம் செய்ய ரசீது பெற்றனர்.

சமூக வலைத்தளம்

ஆனால், உடலை கொண்டு செல்ல அமரர் ஊர்தி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிலர் தள்ளுவண்டியில் அவர் உடலை வைத்து சுமார் 2 கி.மீ. தூரம் தேனி எரிவாயு தகன மேடைக்கு சாலையில் கையால் தள்ளியபடி கொண்டு வந்தனர். அங்கு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே தள்ளுவண்டியில் மூதாட்டியின் உடலை மயானத்துக்கு கொண்டு வந்த காட்சிகளை பொதுமக்கள் பலரும் வேதனையுடன் பார்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT