போலீசார் உடனடியாக விரைந்து சென்று நூர்ஜகான் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நூர்ஜகான் (வயது 60). இவரது கணவர் அப்துல் ஜலில். இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நூர்ஜ கான் மட்டும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது ஒரே மகள் திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் குடிசை வீட்டை உட்புறமாக பூட்டி விட்டு நூர்ஜகான் தூங்கினார். இந்நிலையில் திடீரென நள்ளிரவு சுமார் 3 மணிக்கு அவரது அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் நூர்ஜகான் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அவரது வீடு தீப்பற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீ விபத்தில் நூர்ஜகான் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடனடியாக விரைந்து சென்று நூர்ஜகான் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.