தமிழக செய்திகள்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு- 1 லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பு

சென்னையில் ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி நிலவிய நிலையில் நேற்று மாலையில் வெளியான கருத்துக் கணிப்புகளும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

தமிழகம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இவர்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் தொகுதிகள் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வாக்கு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் ராணி மேரி கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ராணி மேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு எந்திரங்களும், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களும் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ந்தேதி அன்று ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில் சென்னையில் 20 ஆயிரம் போலீசார் 3 ஷிப்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் இரவு-பகலாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 62 வாக்கு எண்ணும் மையங்களும் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தமிழக போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு உள்ளது.