சூப்பர் எல்நினோ தாக்கத்தால் தமிழகத்தில் கோடைக்காலத்தைப் போல் கடும் வெப்பம் நீடித்து, பகலில் பொதுமக்கள் வெளியில் செல்ல அவதிப்படுகின்றனர். மருத்துவர்கள் நீர்சத்து நிறைந்த பானங்கள் அருந்தி வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கின்றனர். வானிலை ஆய்வாளர்கள் அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் வெப்பம் குறைந்து, கூடுதல் மழைப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
சூப்பர் எல்நினோ காரணமாக தமிழகத்தில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தை போன்று பகலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அக்னி நட்சத்திர கால கட்டங்களில் அடிப்பது போன்று அதிக வெயில் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் வெளியில் செல்பவர்களும், சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். பெண்கள் துப்பட்டா மற்றும் சேலைகளை தலையில் போர்த்தியபடியே செல்வதை காண முடிகிறது. எப்போதும் கோடை காலத்தில்தான் இளநீர், குளிர்பானங்கள் போன்றவை அதிக அளவில் விற்பனையாகும். ஆனால் தற்போது அதே போன்று இளநீர் கடைகளிலும் குளிர்பான விற்பனை நிலையங்களிலும் பகல் நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதையும் பார்க்க முடிகிறது.
வெயில் அதிகமாக இருப்பதால் அதிக தாகம் எடுப்பதுடன் சோர்வும் ஏற்படுகிறது. அதில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் நீர்சத்து நிறைந்த பானங்களை அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். இந்த வெயிலின் தாக்கம் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீடிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, ‘எல்நினோ பாதிப்பு காரணமாகவே தென்மேற்கு பருவமழை மிகவும் குறைவான அளவில் பதிவாகி இருந்தது. தற்போதைய அதிக வெயிலின் தாக்கத்திற்கும் எல்நினோவே காரணம். அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னரே வெயிலின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
எல்நினோவை பொறுத்தவரையில் வெயிலாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் அதிக பாதிப்பு கொடுப்பதாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட்ட பிறகு வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.
இதை தொடர்ந்து தமிழக அரசும் சூப்பர் எல்நினோ பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கால்வாய்களை தூர்வாருவது போன்ற பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு மழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரையில் பாரபட்சமின்றி வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் எப்போதுமே அதிக மழைப்பொழிவு இருந்து வந்துள்ளது. இதனால் வெள்ளத்தில் மிதக்காத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி இருக்கும்.
எல்நினோ பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கூடுதல் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொது மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது. ஒரே நாளில் அதிக மழை பெய்து விட்டால் எப்படி தற்காத்து கொள்வது என்பது பற்றி இப்போதே யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் பருவமழை தொடங்கும் முன்னரே சென்னை வாசிகளை எல்நினோ பாதிப்பு அடிவயிற்றை கலங்க செய்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இப்படி பொதுமக்கள் மத்தியில் நிலவும் வெள்ள பாதிப்பு பய உணர்வை போக்கும் வகையில் மழைநீர் கால்வாய்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் புதர் மண்டி காணப்படும் கால்வாய்கள் என அனைத்து கால்வாய்களையும் தூர்வாறுவதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கிய உடன் தேங்கும் வெள்ளத்தை வடிய வைப்பதற்கான பணிகளில்தான் எப்போதும் புறநகர் பகுதிகளில் அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அப்படி செய்யாமல் இந்த ஆண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச உணர்வை போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது கோடை காலத்தை போன்று அதிகரித்து உள்ள வெயிலின் தாக்கம் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு கோடை காலத்தில் எப்படி வெப்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோமோ அதே போன்று முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இரவு நேரங்களில் வெப்பம் காரணமாக வியர்த்து கொட்டுவதால் டாக்டர்களின் அறிவுரைப்படி வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் கோடை காலத்தில் ஏற்படுவது போன்ற வேர்க்குரு, தடிப்புகள் ஆகிய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே எல்நினோ பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக மாறி இருக்கிறது.