கனமழையின் காரணமாக கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது.
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு ஈளாடா கிராமப்பகுதியில் சுமார் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், சராசரியாக 9 முதல் 12 அடி ஆழமும் கொண்டதுமான கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது.
தடுப்பணை அருகிலுள்ள மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் கோத்தகிரி நேரு பூங்கா அருகிலுள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கோத்தகிரி நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.