சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உத்தரவின்படி, மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் வன்னிஅரசு உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.
ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.36 லட்சத்தை 2-வது ஆண்டாக முழுமையாக மாணவர் பாரதிதாசன் பெற்றுள்ளார்.
மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்திலும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவின்படியும் எஞ்சிய தொகையான ரூ.23.95 லட்சமும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.