அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் முன்பே, அதாவது ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு முன்பே டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடி கால்வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையில்லாமல் சென்றது. மேலும், மழைக்காலங்களில் நீர் நிலைகளில் தடுப்பின்றி வெள்ள நீர் வேகமாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சிக் காலத்தில் தூர்வாரும் பணியையும், ஆறுகளின் கட்டமைப்புப் பணிகளையும், அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு பெற்ற விவசாய சங்கங்களுக்கே வழங்கி, விவசாயிகளே தூர்வாரும் பணியை மேற்கொண்டதால், இப்பணி 100 சதவீதம் முறையாக நடைபெற்றது.
இதனால் விவசாயிகளுக்கு எவ்வித சேதமுமின்றி விளைச்சல் பெருகி, அம்மா ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 6 முறை பெற்றோம். இந்த ஆண்டும் (2026) தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர கோலத்தில் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் மழை வெள்ள நீர் வடியாமல் விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மேலும், கொள்ளிடம் ஆறு, கோரையாறு, வெண்ணாறு போன்ற ஆறுகளில் இருந்து கிளை ஆறுகள் பிரியும் தலைப்புகளில் ஆகாயத் தாமரையை தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்புகளை அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.
எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, டெல்டா மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்திட வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.