தமிழக செய்திகள்

பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டார் - இ.பி.எஸ்.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

தமிழ்நாட்டில் நடைபெறும் தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் டி.டி.வி. தினகரன் தலைமையிலும், கடலூரில் அன்புமணி தலைமையிலும், மதுரையில் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கரு நாகராஜன், வினோஜ் பி செல்வம், ஜெயப்பிரகாஷ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டார்.

* பள்ளி மாணவ - மாணவிகள் பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் காட்சியை பார்க்கையில் வேதனையாக உள்ளது.

* தமிழகத்தில் மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

* சென்னையில் பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்டனர். இந்த இரு வழக்கிலும் தற்போது வரை உண்மை குற்றவாளிகளை பிடிக்கவில்லை.

* குமாரபாளையத்தில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை, தி.மு.க. ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாத நாட்களே கிடையாது.

* 2 வயது குழந்தையை பாலியல் கொலை செய்தவர் தி.மு.க.வை சேர்ந்தவர்.

* குற்றவாளிகளுக்கு துணை நிற்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.

* பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தூசு தட்டப்படும்.

* அதிகாரிகளின் உடந்தையுடன் மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

* கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

* நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் என அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. 3 முறை அமலாக்கத்துறை கடிதம் அனுப்பிய போதிலும் தற்போது வரை FIR பதிவு செய்யப்படவில்லை.

* டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலித்து நாளொன்றுக்கு ரூ.15 கோடி கொள்ளையடிக்கப்படுகிறது. ரூ.10 கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ரூ.24,000 கோடி அளவுக்கு கொள்ளை நடைபெறுகிறது.

* விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் கொலை வழக்கில் தற்போது வரை நடவடிக்கை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.