தமிழக செய்திகள்

காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

த.வெ.க. ஆட்சி

த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது.

பயிர்க்கடன் தள்ளுபடி

ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.

குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க.வின் சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

கர்நாடக முதல்-மந்திரி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.

த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளி வந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

முதலமைச்சர் விஜய்

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டம்

முதலமைச்சர் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை மந்திரி அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சரின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.