சென்னை:
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.
நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல் படை கிழக்கு மண்டல அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கோட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கடலோர காவல் படை அலுவலக வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது
இதுதொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடலோர காவல் படை அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.