அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது, கட்சிவிட்டு கட்சி தாவியதாக ஆதவ் அர்ஜூனாவை கடுமையாக விமர் செய்தார்.
இந்த தொகுதி பொறுப்பாளர் ஆதவ் அர்ஜூனா சொல்கிறார், எடப்பாடி பழனிசாமி மகன் அதிமுக சொத்தை அபகரிப்பாராம். என் மகன் அதிமுக உறுப்பினர்தான். ஆனால் எந்த பதவியிலும் இல்லை. இவர் ஆட்டயப் போட்டுப் போட்டு, அந்தப் பழக்கம் மாறவில்லை. ஆதவ் நீங்கள் எத்தனை கட்சிக்கு போனீர்கள்.? திமுக-வில் யாருக்கு பெட்டி தூக்கிகொண்டு இருந்தீர்கள் என்பது தெரியும். பிறகு விசிக சென்றார், அங்கு அவரது போக்கு சரியில்லை என்று விரட்டினார்கள்.
பிறகு அதிமுக-வுக்கு வந்தார், துணைப் பொதுச்செயலாளர் கேட்டார். நான் தெளிவாக சொல்லிவிட்டேன் உழைப்பவர்களுக்குத் தான் அதிமுகவில் பதவி கிடைக்கும், பதவியை விலைக்கு விற்பதில்லை என்று சொல்லிவிட்டேன். பிறகுதான் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார். இப்படி பல கட்சிக்கு போய்விட்டு வந்தவருக்கு நம்மைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி இருக்கிறதா? நான் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட பிறகு கட்சி நிதியை அதிகரித்திருக்கிறேன். உங்களைப் போல கலப்பட ரத்தம் உடலில் ஓடவில்லை, ஒரிஜினல் அதிமுக ரத்தம் ஓடுகிறது. நீங்கள் பல கட்சிக்கு போய்விட்டு வந்ததால் கலப்பட ரத்தம்.
1974-ல் இருந்து இன்று வரை அணி பிறழாமல் அதிமுகவில்தான் நான் இருக்கிறேன். என் அனுபவம் உங்கள் வயதுகூட இல்லை, பேசும்போது நாவடக்கம் தேவை. எம்ஜிஆர் பாடலில் சொல்லியிருக்கிறார், பதவி வரும்போது பணிவு வரவேண்டும், ஆணவம் நிலைக்காது. உங்களைப் போல எத்தனை பேரை நாங்கள் பார்த்துவிட்டோம். நான் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ, எம்பி, முதல்வர் ஆக இருந்தேன். நீங்கள் அங்கு போய் 2 வருடம்தான் ஆகுது, கட்சி ஆரம்பித்தே 3 ஆண்டுதான். முளைச்சு மூணு இலை விடவில்லை நீங்களே இந்த ஆட்டம் ஆடினால் பொன்விழா கண்ட கட்சி எந்தளவுக்கு ஆடும்?.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.