திருச்செந்தூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் காத்திருக்கும் நேரத்தில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு த.வெ.க. தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி, அவரது உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சேதுபதி ஆகியோர் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் இன்று காலை கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சுவாமி மூலவர், சண்முகர், விஸ்வரூப தீபாராதனை தரிசனம் செய்தனர். பின்னர் தட்சிணா மூர்த்தி, வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள் ஆகிய சன்னதியில் வழிபாடு செய்தனர். எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் நேற்று பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.