தமிழக செய்திகள்

சேலம் மாவட்டம் அதிமுக கோட்டை என்று நிரூபித்த மக்களுக்கு பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் - எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக-வை ஏழு தொகுதிகளில் வெற்றி பெறச்செய்த மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர்,

"சேலம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதுபோல நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு இரவு பகல் பாராமல் பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு எவ்வளவோ சூழ்நிலைகள் இருந்தாலும் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல் வருகின்ற பொழுதிலும், சேலம் மாவட்டம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மாவுடைய கோட்டை என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.

இன்றையதினம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே கழகத்தின் சார்பாக போட்டியிட்டு எனக்கு சுமார் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த எடப்பாடி தொகுதி மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியை பாதங்களை தொட்டு வணங்கி தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல இன்றைக்கு மேட்டூர் சட்டமன்ற தொகுதி, சங்ககிரி சட்டமன்ற தொகுதி, ஏற்காடு சட்டமன்ற தொகுதி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி, ஓமலூர் சட்டமன்ற தொகுதி, எடப்பாடி சட்டமன்ற தொகுதி ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவதற்கு உழைத்த நம்முடைய நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.