தமிழக செய்திகள்

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்னர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் தேர்தல் தோல்விக்கு பிறகு அவருக்கு எதிராக சி.வி.சண்முகம் அணியுடன் கைகோர்த்த சில எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மீண்டும் ஆலோசனை

இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்கள் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 10 மணிக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இன்று மாலையில் தேனி கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார்.

கடலூர்

நாளை 16-ந்தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், 11.30 மணிக்கு கடலூர் கிழக்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலை 4.30 மணிக்கு கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 18-ந்தேதி காலை 10 மணிக்கு கரூர் மாவட்ட நிர்வாகிகள், 11.30 மணிக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகிகள், அன்று மாலை 4.30 மணிக்கு விருதுநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்னர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் தேர்தல் தோல்விக்கு பிறகு அவருக்கு எதிராக சி.வி.சண்முகம் அணியுடன் கைகோர்த்த சில எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் விலகி த.வெ.க.வில் சேர்ந்து உள்ள நிலையில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்படும் 16 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.