எடப்பாடி பழனிசாமி 
தமிழக செய்திகள்

த.வெ.க. அரசை கண்டித்து துறையூரில் அதிமுக 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆதாரங்கள் வெளியே போகாது என்று நினைத்து தன்னுடைய சுயரூபத்தை முழுமையாக துணை சபாநாயகர் ரவிசங்கர் வெளிக்காட்டி இருக்கின்ற கோர காட்சிகளை இன்றைக்கு உலகமே பார்க்கிறது.

த.வெ.க. துணை சபாநாயகர் ரவிசங்கரின் செயல்பாடுகளை கண்டித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததின் பேரில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் துறையூரில் 18-ந்தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கரை சந்தித்து குறைகளை தெரிவிப்பதற்காக சென்ற சமூக செயல்பாட்டாளர் கார்த்திக் குமார் மிகக் கொடூரமான கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவரை வசைபாடி இருப்பதும், தமிழ்நாட்டில் இருக்கின்ற சாதாரண குடிமகன் ஒவ்வொருவரும் பெரும் அச்சமடைகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

ஆதாரங்கள் வெளியே போகாது என்று நினைத்து தன்னுடைய சுயரூபத்தை முழுமையாக துணை சபாநாயகர் ரவிசங்கர் வெளிக்காட்டி இருக்கின்ற கோர காட்சிகளை இன்றைக்கு உலகமே பார்க்கிறது.

மவுனம்

ஆதாரங்கள் வெளியானதை கண்டு அச்சப்பட்ட ரவிசங்கர், அந்த சமூக செயல்பாட்டாளரை மீண்டும் மிரட்டி, காவல் துறை அதிகாரிகளில், யாரோ ஒருவரை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நபராலேயே, அங்கு நடந்த சம்பவமே பொய் என்று சமூக வலைதளங்களில் வெளியிட வைத்திருப்பது, சினிமாவையே மிஞ்சுகிறது.

கார்த்திக் குமார், நடந்த உண்மைகளை முழு வீடியோவாக வெளியிட, தங்களை அப்பாவிகள் போல் காட்டிக்கொள்ளுகின்ற இவர்களின் முகத்திரை, இன்றைக்கு மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்குகிறது. இவ்வளவு அப்பட்டமாக த.வெ.க-வின் துணை சபாநாயகர் தவறிழைத்து மாட்டிக்கொண்ட பிறகும், முதலமைச்சர் விஜய் இது குறித்து வாயே திறக்காமல் இன்னும் மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்ப்பாட்டம்

வாக்களித்து வெற்றிபெற செய்த மக்கள் மீது அதிகார திமிரில் அத்து மீறுவதும், நாடகங்களை அரங்கேற்றி மக்களை ஏமாற்றுவதும் அப்பட்டமாக மாட்டிக்கொண்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரத் திமிரோடு செயல்படுவதும் கண்டனத்திற்கு உரியதாகும்.

துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் த.வெ.க. அரசை கண்டித்தும், தவறிழைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில், வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், `துறையூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமையிலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோக நாதன் முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT