உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் 2050-ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 35 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகளாக புகையிலை பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவைகளை WHO அமைப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது கிட்டதட்ட 1 கோடி உயிர்களை பறித்து, இதய நோய்களுக்கு பிறகு உலகளவில் இறப்பிற்கான முக்கிய காரணியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பு சிகிச்சை முறைகள் குறித்து, அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மையங்களின் மருத்துவ புற்று நோயியல்(மார்பகம் மற்றும் மார்பு) பிரிவின் தலைவர் டாக்டர் புவன் சுக் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் குறித்து மருத்துவர் புவன் கூறுகையில், “நாம் புற்று நோய்க்கான பரிசோதனை, தடுப்பு முறைகள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் நவீன சிகிச்சை முறைகளை இன்னும் செயல்படுத்தவில்லை. இதன்விளைவாக அதிகமான நோயாளிகள் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறார்கள்.
இதற்கான தீர்வாக பொது சுகாதார நடவடிக்கைகளை நவீன புற்றுநோய் சிகிச்சையுடன் இணைக்க வேண்டும். அதே நேரத்தில் மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்று நோய்களுக்கான பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் நோயை முன்கூட்டியே கண்டறிந்து, குணப்படுத்தும் அளவை அதிகரிக்க முடியும். மேலும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை விட, அவற்றிற்கான தடுப்பு முறையே சிறந்தது.
HPV-க்கு எதிரான தடுப்பூசி எதிர்காலத்தில் கருப்பை வாய் புற்றுநோயின் சுமையை கணிசமாக குறைக்கும், அதே நேரத்தில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோயை தடுக்க உதவும்.
இறுதியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சரியான நேரத்தில் நோயறிதல், அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சைகளை பெற வேண்டும்.
சிறந்த காப்பீடு வசதிகள், அரசாங்க ஆதரவு மற்றும் கட்டுப்படியான மருந்து விலைகள், உயிர்வாழும் வாய்ப்பை கணிசமாக மேம்படுத்தும்”
இவ்வாறு புற்று நோய்க்கான காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து, அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மருத்துவமனையின் மார்பக பிரிவின் தலைவர் டாக்டர் புவன் சுக் தெரிவித்தார்.