கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், எம்.எல்.ஏ.வை கைது செய்ய கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் த.வெ.க. எம்.எல்.ஏ.வின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களையும் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.