தமிழ்நாட்டில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு இடையில் வெப்பசலன மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்திருந்தது.
கடந்த வாரம் வரை வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்து காணப்பட்ட சூழலில், இந்த வாரம் தொடங்கியதில் இருந்து வெயிலின் கொடுமையும் அதிகரித்தது.
அதிலும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் 16 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
அதிகபட்சமாக ஈரோட்டில் நேற்று 106.52 டிகிரி வெயில் பதிவானது. அதற்கடுத்தபடியாக வேலூரில் 106.34 டிகிரி பதிவாகி இருந்தது.
சென்னையை பொறுத்தவரையில் கடந்த 3 தினங்களாகவே வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உணர முடிகிறது. கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலையின் தாக்கம் உணரப்படலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது.
குறிப்பாக மெரினா கடற்கரையில் புழுதிக்காற்று வீசியது. இதனால் காலையில் நடைபயிற்சிக்கு மேற்கொண்ட பொதுமக்கள் அவதியடைந்தனர். மணல் கலந்தபடி காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றமாக உள்ளதால் மெரினா கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம். மெரினாவில் இருந்து உடனடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என கண்காணிப்பு அறையில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் இல்லை. வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காற்று வீசி வருவதால் தற்போது சென்னையில் இதமான சூழல் நிலவி வருகிறது.