தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி பதிவாகி இருந்தது. பகல் நேரங்களில் வெப்ப அனல் காற்று வீசி வருகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் ஆகியவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதர வெளி மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது நிலவிவரும் அதீத வெப்ப அலையின் காரணமாக மத்தாப்பு தயாரிப்பு தொழிற்சாலையில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் காரணத்தால் ரசாயன கலவை தயாரித்தல் மற்றும் ரசாயன கலவை நிரப்புதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.