போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி துணை நிற்கும் என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 12ம் தேதி தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள் அருகே உள்ள 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக்கட்சி வரவேற்கிறது.
அடுத்த இரு வாரங்களில் இக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 4, 765லிருந்து 4,048 ஆக குறையும்.
இவை தவிர மனமகிழ் மன்றங்கள், 11 லிருந்து 11 வரை உள்ளிட்ட பெயர்களில், தமிழ்நாட்டில் சுமார் 1,500 மதுக் குடிப்பகங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி பெற்றுள்ளன.
இதற்கிடையே சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் மூடப்பட்ட இடத்தில் 7 Star Recreation Club என்ற பெயரில் மது குடிப்பகம் செயல்படுவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அனைத்து மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் இயங்கும் மது குடிப்பகங்களையும் ஒரே உத்தரவில் மூடி முதலமைச்சர் தமிழக மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.
இதன்பின் 4,048 டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அரசு மூடி முழுமையான மதுவிலக்கை கொண்டுவரவேண்டும்.
மேலும் போதைபொருட்களாக கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையையும் தடுத்து நிறுத்திடவேண்டும். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் நிலை நிறுத்தி, போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட முடியும்.
படிப்படியாக மதுக்கடைகளை மூடும்போது அக்கடைகளில் கண்காணிப்பாளர், விற்பனையாளர், உதவியாளர் பணியிடங்களில் பணியாற்றும் 10ம் வகுப்பு முதல் முதுநிலைப்பட்டம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில், நிரப்பப்படாமல் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசுப்பணியிடங்களை ஒதுக்கி அவர்களின் குடும்பத்திற்கும் வழிக்காட்டிட வேண்டும்.
இன்று நாள்தோறும் நடைபெறும் குற்றங்களுக்கு அச்சாணியாக இருப்பது மது மற்றும் போதை பொருட்களின் நுகர்வுதான் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். மது போதைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் அனைத்துதரப்பினரையும் மீட்காவிட்டாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணிக்கதவறிய காவல்துறை மட்டுமல்லாது, வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறையின் பணியாற்றுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படவேண்டும்.
இவற்றை உடனடியாக அரசு செயல்படுத்தினால் மது இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.